Wednesday, March 8, 2017

உதவித்தொகையை பெற குறிப்பாக ஆதரவற்ற, வறுமைகோட்டுக்கு கீழுள்ள ஏழைகளாக இருக்கவேண்டும். ஆனால், கோடிக்கணக்கில் சொத்து இருப்பவர்கள், சொந்த வீடு வைத்துக்கொண்டு வசதியுடன் வாழ்பவர்கள், வாடகைக்கு வீடுவிட்டு சம்பாதிப்பவர்கள், கணவன் இறப்பதற்கு முன்பே விதவைகள் பென்ஷன் என மத்திய-மாநில அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷன் வாங்கிக்கொண்டிருப்பவர்கள் என பலரும் இத்திட்டத்தின்கீழ் மோசடியாக சேர்ந்து மாதாமாதம் உதவித்தொகை பெற்றுவருவது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது.
1)       சென்னை எம்.ஜி.ஆர். நகர் சக்திவினாயகர் கோயில் தெருவை சேர்ந்த பி.சி.புஷ்பா. இவரது கணவர் ஐயப்பன் மத்திய அரசுப்பணியிலிருந்து ஓய்வுப்ற்றதால் மாத பென்ஷனே சுமார் 15,000 ரூபாய்க்கு மேல்வருகிறது. மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். கடந்த 2014-ல் 1200 சதுர அடி நிலத்தை  1 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர். இவரது மகன் தலைமை செயலகத்தில் ஹோம் டிபார்ட்மெண்டில் பணிபுரிகிறார். ஆனால், கணவர் இறந்தக் காரணத்தைச் சொல்லி கடந்த 2001 அக்டோபர் 1-ந்தேயிலிருந்து விதவைகளுக்கான மாத உதவித்தொகையை பெற்றுவருகிறார்.
       
         2)வெங்கடேச சுப்பையா. சென்னை கேகே.நகர் அசோகா காலனியிலுள்ள ஹைடெக்கான ஃப்ளாட்டில் வசிக்கிறார். ஆனால், 2012 டிசம்பர்-1 ந்தேதியிலிருந்து இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகையை வாங்கிக்கொண்டிருக்கிறார்.
          3) சென்னை எ.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணியம்மாளுக்கு வயது 44. ஆனால், நகைச்சுவை என்னவென்றால்  2001 அக்டோபர்-1 ந்தேதியிலிருந்து முதியோர் உதவித்தொகை வாங்கிவருகிறார். இவருக்கு அனுமதி கொடுத்த தனி தாசில்தார் அ.மணி.
          4). சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சொந்த வீட்டில் வசிக்கும் வி.கே.சுகுமாரனுக்கு  த்ரீஇ ஃபேஸ்  மின் இணைப்பு உள்ளது. மாதம், மட்டுமே 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாய் கரண்ட் பில் கட்டுகிறார். ஆனால், ஆதரவற்றவர் என்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் என்றும் முதியோர் உதவித்தொகையை வாங்கி வருகிறார்.
          5) சென்னை எம்ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் பெஸ்ட் பிஸ்கட் ஸ்டால் என்கிற பேக்கிரி வைத்திருக்கும் நாராயணனுக்கு தரைதளம், முதல்தளம், இரண்டாவது தளம் என சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. தான், வசிப்பதுபோக மீதமுள்ள வீட்டை வாடகை விட்டு அதிலும் வருமானம் வருகிறது. மாதம், சுமார் 10,000 ரூபாய்க்குமேல் கரண்ட் பில் கட்டுவதோடு ஆவின் பால், நெய் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் முகவராக உள்ளார். மேலும், ஒரு துணிக் கடையை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால், இவரும் முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டிருக்கிறார்.
          6) எம்.ஜி.ஆர். நகர்,  சக்திவினாயகர் கோயில் தெரு ராதா. இவரது கணவர் அரிதாஸ் சென்னை போர்ட்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்றதால் அவருக்கான மத்திய அரசுப்பணி ஒய்வூதியம்  வந்துகொண்டிருக்கிறது. சுய உதவிக்குழுவை நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால், இவரும் தன்னை ஒரு ஏழை என்று சொல்லிக்கொண்டு 2009 அக்டோபர்-1-ந்தேதியிலிருந்து விதவைகளுக்கான உதவித்தொகையை பெற்றுவருகிறார்.

            7)அன்னை சத்யா தெருவை சேர்ந்த சபாபதிக்கு தரை தளம், முதல் தளம் என 600 சதுர அடியில் சொந்தமாக வீடு உள்ளது. முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, 2010- டாடா மேஜிக் வாகனம் வாங்கி(வண்டி எண்- டி.எம்-09 பி.இ. 1216) ஸ்கூல் சவாரி, ரோடு சவாரி என இரண்டுவிதமாக ஓட்டி வருமானம் பார்ப்பதோடு அரசின் பணி ஓய்வூதியத்தையும் பெற்றுவருகிறவர் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் முதியோர் பென்ஷனையும் வாங்கிவருகிறார்.

            8) எம்.ஜி.ஆர். நகர் பாலைத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் கொத்தவால் சாவடியிலிருந்து மாற்றப்பட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூக்கடைக்கு உரிமையாளர் இவர். இவரது மகள் பெயரிலும் ஒரு பூக்கடை உள்ளது. மேலும், இவர் பெயரில் ஒரு ஆட்டோவும் ஓடுகிறது. ஆனால், 2004 ஜூலை-1 ந்தேதியிலிருந்து முதியோர் உதவித்தொகை வாங்கிவருகிறார்.

     9) அனகாபுத்தூர், கஸ்தூரிபா நகரை சேர்ந்த வரலட்சுமி.  1991- அக்டோபர்-10 ந்தேதியிலிருந்து  ஆலந்தூர் நகராட்சியில் துப்புறவு பணியிலிருந்திருக்கிறார். ஆனால், எஸ்.பி. சாலையில் வசிப்பதுப்போல செம்மஞ்சேரியிலுள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டில்(கதவு எண்:10 ப்ளாக்வி.எல்-1) 2015 மார்ச் 28ந்தேதி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மகள் ரேணுகாவுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் கோல்மால் பண்ணிவிட்டு... இவ்வளவு வருமானத்தை பெற்றும் வரலட்சுமி,  விதவை பென்ஷனை வாங்கி வருகிறார்.  

10) எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்யா நகர் முனுசாமிக்கு சொந்தமாக வீடு உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒயர்மேனாக வேலைபார்த்தவர். அதற்கான, பென்ஷனை ஒரு பக்கம் வாங்கிக்கொண்டு 2009 ஜூலை 1 ந்தேதி முதல் முதியோர் பென்ஷனையும் வாங்கிவருகிறார்.

11)மணிமேகலை... கே.ஆர். ராமசாமி சாலையில் வசித்துவரும் இவரது கணவர் மத்திய அரசிலிருந்து ஓய்வுபெற்றதால் 15,000 ரூபாய்க்குமேல் பென்ஷன் வருகிறது. ஆனாலும் 1981-லிருந்து  விதவை பென்ஷன் வாங்குகிறார்.

12) சென்னை கே.கே. நகரிலுள்ள மாநகர போக்குவரத்துக்கழ டிப்போவில் பணிபுரிந்த காண்டீபன் 2013-ல் உயிரிழந்துவிட்டார். அவருக்கான பென்ஷனை வாங்கிவரும் மனைவி சரஸ்வதி அரசின் முதியோர் உதவித்தொகையையும் பெற்றுவருகிறார்.

13) ஜாஃபர்கான்பேட்டை, அன்னை சத்யா முதல் தெருவில் வசித்தவர் கருப்பையா. இவர், 2007 டிசம்பர் 1-ந்தேதியிலிருந்து முதியோர் பென்ஷன் வாங்கிவருகிறார். ஆனால், இதில் செம கூத்து. இந்த கருப்பையாவின் மனைவி பரிமளாவோ தனது கணவர் இறந்துவிட்டதாக 2002 பிப்ரவரி-1 ந்தேதியிலிருந்து அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பிலிருந்தே விதவைகள் பென்ஷன் வாங்கிவருகிறார். அதேபோலத்தான்,  கணவர் புஷ்பநாதன் 2012 நவம்பர்-1-ந்தேதியிலிருந்து முதியோர் பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கிருக்க  இவரது மனைவி தேவிகாவோ 2011 டிசம்பர்-1 ந்தேதியிலிருந்து அதாவது ஒரு வருட்த்துக்கு முன்பிலிருந்து விதவை பென்ஷன் வாங்கியிருக்கிறார்.

14) மல்லிகா,  கணவரால் கைவிடப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டு அதற்கான உதவித்தொகையை பெற்றுவருகிறார். ஆனா, விசாரித்தால் எம்.ஜி.ஆர். நகர் மருதன் தெருவில் ஒன்றாகத்தான் வசிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

15) எம்.ஜி.ஆர். கலைவாணர் தெருவில் வசிக்கும் கோமதி, கணவர் முருகன் இறந்துவிட்டதாக விதவைகள் பென்ஷனை வாங்கிவாருகிறார். இவரது கணவர் உயிரோடுதான் இருக்கிறார் என்கிறார்கள்.
16)கமலா, எம்.ஜி.ஆர். நகர், பம்ம்ல் நல்லத்தம்பி தெருவை சேர்ந்த இவரது கணவர் அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வ்பெற்றவர். மகன், தேசியவங்கியில் உதவி மேனேஜராக நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறார். மாதம் 5,000 ரூபாய்க்கு மேல் கரண்ட் பில் கட்டுவதோடு 4 வீட்டிற்கான வாடகை வருகிறது. ஆனால், இவரோ முதியோர் திட்ட்த்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவருகிறார்.

17) அதே பம்மல் நல்ல்த்தம்பி தெருவை சேர்ந்த சமுசுகனி, மும்தாஜ், ஆசியா மரியம், முகம்மது யூசூப்,  என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் ஆதரவற்றவர்கள் என்கிற பெயரில் முதியோர் உதவித்தொகை பெற்றுவருகிறார்கள். இவர்கள் அடிக்கடி,  டூரிஸ்ட் விசாவில் செளதிக்கு சென்று வரும் அளவுக்கு வசதி படைத்தவர்கள்.

18) சென்னை கோடம்பாக்கத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர் பத்மா. அதற்கான ஈ.எஸ்.ஐ.காரு உள்ளது.  48,000 ரூபாய்க்கான ஆண்டு வருமான சான்றிதழை கிண்டி-மாமலம் தாசில்தார் அலுவலக்மே வழங்கியிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் ஆராயமலேயே இவருக்கு 2006 நவம்பர்-1 ந்தேதியிலிருந்து விதவை பென்ஷன் வழங்கப்பட்டுவருகிறது.


19) மத்திய அரசின் ஃபுட் கார்ப்பொரேஷன் ஆஃப் இண்டியா பணியில் இருப்பவர் அன்பழகன். இவரது ஈ.எஸ்.ஐ.கார்டிலும் இவரது தாய் ராஜம்மாளின் பெயர் இடம்பெற்றுள்ளது ஆனால், தாயோ ஆதாரவற்றவர் என்கிற பெயரில் முதியோர் உதவித்தொகை வாங்கிவருகிறார்.

20) எம்.ஜி.ஆர். நகர், தந்தை பெரியார் தெரு சகுந்தலா. கணவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று அதற்கான பென்ஷன் வருவதோடு மகனுக்கு பி.எஸ்.என்.எல்-ல் வேலை கிடைத்துள்ளது.  ஆனால், இவரும்  விதவை பென்ஷன் வாங்கிவருகிறார்.

-இது ஸாம்பிள்தான்.  சென்னை மாநகரத்தில், கிண்டி-மாம்பலம் தாசில்தார் அலுவலகத்துக்குட்பட்ட ஒரு ஏரியாவில் மட்டுமே இந்தளவுக்கு மக்களை அரசியல் தங்களின் ஓட்டரசியலுக்கு  ஊழல்வாதியாக மாற்றியிருக்கிறார்கள் என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவுபேர் அரசின் உதவித்திட்டத்தை மோசடியாக பெற்றுவருவார்கள்? இப்படி மக்களே லஞ்ச ஊழலில் ஈடுபட்டால், கோடிகளில் ஊழல் செய்யும்  அரசியல்வாதிகளை எப்படி கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் வரும்?  மாபெரும் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளியாகி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை எதிர்க்கவேண்டியவர்கள் அவரை விடுவிக்க்க்கோரி தீக்குளிப்பதும் உயிர்விடத்துணிவதும் என்னக்காரணம்? மாதாமாதம் கிடைக்கு 1000 ரூபாய் லஞ்சத்துக்காக எத்தனை பேருக்கு லஞ்சம் கொடுத்திருப்பார்கள்? இப்படி எந்த அரசியல்வாதியின் துணையோடு இந்த உதவித்தொகையை மாதாமாதம் பெற்றுவருகிறார்களோ அவர்களுத்தானே சாதகமாக இருப்பார்கள்?  உண்மையான ஏழை எளிய, ஆதரவற்ற, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதில் எந்த தடையுமில்லை. ஏன்... உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும்கூட உயர்த்திக்கொடுக்கலாம். ஆனால், பொய்யானவர்களுக்கப்படுவது உதவித்தொகை அல்ல லஞ்சம். தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, காலமாக நமது ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கொடுக்கும் லஞ்சம். இப்படிப்பட்ட, வாக்காளர்கள் இருக்கும்வரை ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளின் மனதிலிருந்து நீங்காது!
                                  -மனோசெளந்தர்

No comments:

Post a Comment